கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 3 சிறுமிகள் பலி


கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
x
தினத்தந்தி 20 Nov 2018 5:50 AM IST (Updated: 20 Nov 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

பன்வெல் ரெயில் நிலையம் அருகே கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுமிகள் பலியாகினர்.

மும்பை,

நவிமும்பை பன்வெல் ரெயில் நிலையம் அருகே 2 வருடங்களுக்கு முன்பு ரெயில்வே குடியிருப்பு கட்டிட பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த பள்ளம் மூடப்படாமல் இருந்ததால், தற்போது அதில் மழை நீர் தேங்கி இருந்தது.

அந்த பகுதியில் அமராவதியை சேர்ந்த பலூன் வியாபாரி ஒருவரின் குடும்பம் கூடாரம் அமைத்து தங்கி இருந்து வந்தனர்.

இந்தநிலையில் வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த ரேஷ்மா (வயது13), ரோகிதா(10), பிரதிக்சா(8) ஆகிய 3 சிறுமிகள் அங்கு விளையாடி கொண்டிருந்தனர்.

இதில், எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் பிரதிக்சா தவறி விழுந்து தத்தளித்தாள். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரேஷ்மா மற்றும் ரோகிதா, பிரதிக்‌ஷாவை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர்.

இதற்கிடையே விளையாட சென்ற சிறுமிகள் காணாமல் போனதை அறிந்து, அங்கிருந்தவர்கள் தேடியபோது, பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் 3 பேரும் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் உள்ளே இறங்கி சிறுமிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய சோதனையில் 3 சிறுமிகளும் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து பன்வெல் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story