இளம்வயது திருமணத்தை தடுக்க பயிற்சி - கலெக்டர் தலைமையில் நடந்தது


இளம்வயது திருமணத்தை தடுக்க பயிற்சி - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 5:45 PM GMT)

குழந்தை தொழிலாளர் மற்றும் இளம்வயது திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையில் நடந்தது.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் மற்றும் இளம்வயது திருமணம் தடுப்பு குறித்து சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, சைல்டு லைன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுக் கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

பெண் கல்வியை ஊக்கப்படுத்தவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டும் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் பெண்களை கல்வி கற்க ஊக்கப்படுத்தியும், குழந்தை தொழிலாளர்களாக மாறாமல், பிற வழிகளில் தவறான பழக்கத்துக்கு அடிமையாகாமல் பாதுகாத்திடவும், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை கண்டறிந்து மீண்டும் கல்வி கற்கவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகள், பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பல்வேறு துறைகளின் சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

14 வயதுக்குட்பட்டவர்களை வருமானம் ஈட்டிடும் வகையில் வேலைக்கு அனுப்புவதை குழந்தை தொழிலாளர் சட்டம் தடை செய்கிறது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கல்வி கற்க செய்திட தொழிலாளர் சட்டம் வழிவகை செய்கிறது.
குழந்தை தொழிலாளர் களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பள்ளி இடைநின்றலை தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளி இடைநின்றவர்களை கண்டறிந்து, அவர்கள் கல்வி கற்றிட அரசு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி இலவச கல்வி வழங்கி வருகிறது.

பொதுமக்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாத காரணத்தால் 18 வயது பூர்த்தியாகும் முன்பே உறவு முறைகள் விட்டுப்போகாமல் இருக்கவும், பெண் குழந்தைகளை கல்வி கற்க செய்வது கூடுதலான செலவு என கருதுவதாலும், பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதால் வருமானம் ஈட்டிடலாம் என்ற தவறான, விழிப்புணர்வு இல்லாத எண்ணங்களால் இளம்வயது திருமணங்கள் நடக்கிறது. இதனால், குழந்தை தொழிலாளர்களும் உருவாகின்றனர்.

எனவே, இளம்வயது திருமணங்கள் நடக்காத மாவட்டமாகவும், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாகவும் தேனி மாவட்டத்தை உருவாக்க அனைத்து துறை அலுவலர்களும் தொடர்ந்து திறம்பட பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், சைல்டு லைன் இயக்குனர் முகமது சேக் இப்ராகிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story