‘கஜா’ புயலின் தாக்கத்தால்: 5 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கும் சிறுமலை


‘கஜா’ புயலின் தாக்கத்தால்: 5 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கும் சிறுமலை
x
தினத்தந்தி 21 Nov 2018 3:30 AM IST (Updated: 20 Nov 2018 11:27 PM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை 5 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. இந்த புயலால், பலத்த சூறாவளி காற்றுடன் சுமார் 4 மணி நேரம் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும், 1,500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்தன.

இந்த புயலால் மலைப்பகுதியான கொடைக்கானல் தான் அதிக அளவு சேதத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக மலைப்பாதைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மலைப்பாதைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, கொடைக்கானல் தனித்தீவானது. அனைத்து அதிகாரிகளின் பார்வையும் கொடைக்கானல் பகுதியை நோக்கி இருப்பதால், மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இதேபோல், திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையும் வனப்பகுதி தான். ‘கஜா’ புயலுக்கு முந்தைய நாளில் இருந்தே சிறுமலையில் மழை பெய்தது. இதனால் அன்றைய தினமே, சிறுமலை, அகஸ்தியர்புரம், தென்மலை, பழையூர், புதூர், தாளக்கடை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து புயலால் சிறுமலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்துள்ளது. அதேபோல், சுமார் 100 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை வழியாக செல்லும் மெயின் ரோட்டில் சாய்ந்த மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியில், சாய்ந்துள்ள மரங்கள் முழுவதுமாக அகற்றப்படவில்லை.

சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால், சிறுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சிறுமலையில் பெரும்பாலான வீடுகள் மண்ணால் கட்டப்பட்டுள்ளது. இதனால் பல வீடுகளின் சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. அண்ணாநகர் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், காபி, அவரை, சவ்சவ் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.

திண்டுக்கல்-சிறுமலை மலைப்பாதையில் சரிந்து கிடக்கும் மண்ணை, பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் தேனி மாவட்டம், சின்னமனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் யுகேஷ்குமார் தலைமையிலான ஊழியர்கள் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானலில் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டிருக்கும் அதிகாரிகள், தங்கள் பகுதியை கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சிறுமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி பெருமாள் என்பவர் கூறியதாவது:-

இங்கு கடந்த 15-ந்தேதியில் இருந்தே மழை பெய்ததால், அன்றைய தினமே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் பலத்த சூறாவளி காற்றுடன், கனமழை பெய்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றுக்கு சில வீடுகளின் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கனமழைக்கு பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன. மின்சாரம் இல்லாததால் மழை நின்ற பின்பு கூட, அது ‘கஜா’ புயல் என்று எங்களுக்கு தெரியாது. சிறுமலை-திண்டுக்கல் சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால், அன்றைய தினம் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சிறுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 100 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், இன்னும் எங்கள் பகுதிக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் கடந்த 5 நாட்களாக இருளில் தவித்து வருகிறோம். குடிநீர் வினியோகம் செய்யாததால் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம்.

தொழுக்காடு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தோட்டங்களுக்கு செல்லும் மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மலைப்பாதைகள் சேதமடைந்துள்ளதால் தினமும் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வேலைக்கு செல்கிறோம். எனவே கொடைக்கானலை போன்று எங்கள் பகுதியிலும், மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story