செய்யாறு அருகே: விவசாயி அடித்துக்கொலை - உறவினர்கள் சாலை மறியல்


செய்யாறு அருகே: விவசாயி அடித்துக்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:00 AM IST (Updated: 21 Nov 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே கடப்பாரையால் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு,

செய்யாறு தாலுகா வடதண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் விநாயகமூர்த்தி (வயது 33), விவசாயி. இவருடைய மனைவி உமா (30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற விநாயகமூர்த்தி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் உமா மற்றும் அவரது உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
நேற்று காலை 7 மணி அளவில் அருகாவூர் கிராமத்தில் சீனுவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விநாயகமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து உமாவும், அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் உடல் அருகே ரத்தக்கறை படிந்த கடப்பாரை இருந்தது. இதனால் விநாயகமூர்த்தியை மர்மநபர்கள் கடப்பாரையால் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரேத பரிசோதனைக்காக உடலை எடுக்க முயன்ற போது, உறவினர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள், “கொலையாளிகளை கைது செய்த பிறகே உடலை எடுக்க வேண்டும்” என்றனர். கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் உறவினர்கள் அரசு மருத்துவமனையின் எதிரில் செய்யாறில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் திடீரென கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்தவுடன் செய்யாறு தாசில்தார் மகேந்திரமணி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்க விநாயகமூர்த்தியின் உறவினர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் திடீரென செய்யாறு - ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விநாயகமூர்த்தி, முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது கொலைக்கு வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story