நாங்குநேரி அருகே பரிதாபம்: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி தங்கை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை


நாங்குநேரி அருகே பரிதாபம்: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி தங்கை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 21 Nov 2018 3:45 AM IST (Updated: 21 Nov 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே ஆம்னி பஸ் மோதி, பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய தங்கை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாங்குநேரி, 

நாங்குநேரி அருகே ஆம்னி பஸ் மோதி, பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய தங்கை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆம்னி பஸ் மோதியது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளத்தை சேர்ந்தவர் முருகன். அவருடைய மனைவி மல்லிகை. இவர்களுடைய மகள் பேச்சியம்மாள் (வயது 17). இவர் நாங்குநேரி- வள்ளியூர் இடையே அமைந்துள்ள தளபதி சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் அவருடைய தங்கை ராமலட்சுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை அக்காள்- தங்கை மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாணவி இசக்கியம்மாள் (16), மாணவர் சிவபெருமாள் (13) ஆகிய 4 பேரும் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு தனித்தனியாக சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். நம்பியாறு பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக மாணவ-மாணவிகள் மீது மோதியது. இதில் பேச்சியம்மாள், ராமலட்சுமி, இசக்கியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மாணவர் சிவபெருமாள் காயமின்றி தப்பினார்.

மாணவி பரிதாப சாவு

அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் மாணவிகளை உடனடியாக மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பேச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் அம்பையை சேர்ந்த வீரபாகு மகன் முத்தையா அய்யப்பன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேச்சியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆம்னி பஸ் மோதி மாணவி பேச்சியம்மாள் பரிதாபமாக இறந்ததால், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் கண்கலங்கினர். இச்சம்பவத்தை தொடர்ந்து, நேற்று அந்த பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

Next Story