மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - கலெக்டர் தகவல்


மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 7:01 PM GMT)

மகா தீப தரிசனத்துக்காக மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மகா தீப தரிசனத்தன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள தீப மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மலை ஏற அனுமதிச்சீட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 23-ந் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வருபவர்கள் உரிய அடையாள சான்று, ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மலை ஏறுவதற்கென அறிவிக்கப்பட்ட பேகோபுரம் எதிர் புறத்தில் அனுமதி சீட்டை காண்பித்து மலை ஏற வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி இல்லை.

மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கண்டிப்பாக கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. மலை ஏற வரும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story