அங்கன்வாடி காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கந்தசாமி உறுதி


அங்கன்வாடி காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கந்தசாமி உறுதி
x
தினத்தந்தி 21 Nov 2018 4:00 AM IST (Updated: 21 Nov 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் என்.டி.மகாலில் நேற்று குழந்தைகள் தினவிழா நடந்தது. அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றுப் பேசினார்.

தேசிய அளவில் சாதனைபடைத்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவை மாநிலத்தில் 35 வயதுக்கு குறைவானவர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 1½ லட்சமாக உள்ளது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காமல் குழந்தைகளுக்கான திட்டங்களை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலமாகவும் புதுச்சேரி உள்ளது. எனவேதான் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பெண்களுக்காக கர்ப்ப கால திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–

அங்கன்வாடி ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல் அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதேபோல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவோம். அரசுத்துறைகளில் சுமார் 7 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.


Next Story