கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியம் வழங்க முட்டுக்கட்டை - நாராயணசாமி வேதனை
கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியம் வழங்க சிலர் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேதனையுடன் தெரிவித்தார்.
புதுச்சேரி,
65–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். புதுவை மாநில கூட்டுறவு ஒன்றிய நிர்வாகி இரிசப்பன் வரவேற்று பேசினார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
மக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன. லாப நோக்கத்தில் ஆரம்பிக்கப்படாவிட்டாலும் நஷ்டத்தில் இயங்க ஆரம்பிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமாக இங்கு ஆட்களை நியமித்ததால் பல கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
கூட்டுறவு சர்க்கரை ஆலை, நூற்பாலைகளை திறம்பட நடத்திட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயன் குழு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. சிலர் சொல்வதுபோல் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பமாட்டோம். நிறுவனங்களை மூடுவது என்பது சிரமமானது அல்ல. ஆனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை என்ன? அந்த நிறுவனங்களை படிப்படியாக லாபத்தில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்காக ரூ.786 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கினோம். அதில் ரூ.376 கோடி சம்பளத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி மாநில திட்டக்குழுவில் முடிவு செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற்று சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது. அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
டெல்லியில் நிதி அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது. நிதி கேட்பு கோப்புகள் கவர்னருக்கு செல்லாது. இதேபோல் கேட்டு நாங்கள் உள்துறை அமைச்சகத்தை அணுகினோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிதி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க கடிதம் அனுப்பினார்கள். ஆனால் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை.
தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூடாது என்று பிரச்சினையை உருவாக்குவது யார்? என்பது உங்களுக்கு தெரியும். கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க சிலர் முட்டுக்கட்டையாக உள்ளனர். பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்களிடம் உள்ள பார்களை கீழ் குத்தகைக்கு விட்டால் ஆண்டுக்கு ரூ.90 கோடி வரை வருமானம் கிடைக்கும்.
அதில் பணிபுரியும் ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும்போது அந்த நிறுவனத்தை லாபத்தில் இயங்க செய்யவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். கர்நாடகாவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், சர்க்கரை ஆலை, பஞ்சாலைகளை லாபத்தில் இயக்குகின்றனர். கூட்டுறவு துறையில் அடுத்த ஆண்டு நல்ல மாற்றம் வரும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–
புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாகியில் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்குகிறது. அவர்கள் பஸ், கல்லூரிகளை இயக்குகிறார்கள். ஆனால் புதுவையில் முன்னேற்றம் இல்லை. கூட்டுறவு ஒன்றிய ஊழியர்களுக்கு 9 மாதமாக சம்பளம் இல்லை.
500 கூட்டுறவு நிறுவனங்கள் இருக்கும் நிலையில் 5 நிறுவனங்கள்தான் லாபத்தில் இயங்குகிறது. ரேஷன்கடை ஊழியர்களுக்கு 20 மாத சம்பளம் பாக்கி உள்ளது. அவர்களுக்கு 5 மாத சம்பளம் தருகிறோம் என்றால் தங்களை பணிநிரந்தரம் செய்ய சொல்கிறார்கள். கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் தெளிவான முடிவு எடுத்தால்தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.