பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 1,500 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை மருத்துவ அதிகாரிகள் தகவல்


பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 1,500 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை மருத்துவ அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2018 3:45 AM IST (Updated: 21 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 1,500 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் நல சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவின் கீழ் மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது டெங்கு, பன்றிகாய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் ஆங்காங்கே உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் தமிழக அரசு சார்பில் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக பெரியார் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் லேசான காய்ச்சல் ஏற்பட்டாலும் சிகிச்சை பெற பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற 1,500-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளனர். வழக்கமான நாட்களில் இங்கு 300 முதல் 500 பேர் வரை சிகிச்சைக்கு வருவதுண்டு. ஆனால் டெங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் சிகிச்சை பெற வந்த 1,544 பேரில் காய்ச்சலின் தன்மைக்கேற்ப 144 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 5 பேருக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான ரத்த அணுக்கள் இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சையில் எந்த தாமதமும் இருக்க கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுவதோடு, அவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அதிகாரிகள் ஹேமலதா மற்றும் ஸ்ரீதேவி தெரிவித்தனர்.

Next Story