காட்டு யானை துரத்தியதில்: வேட்டை தடுப்பு காவலர் கீழே விழுந்து காயம்


காட்டு யானை துரத்தியதில்: வேட்டை தடுப்பு காவலர் கீழே விழுந்து காயம்
x
தினத்தந்தி 21 Nov 2018 3:15 AM IST (Updated: 21 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானை துரத்தியதில் வேட்டை தடுப்பு காவலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

குன்னூர், 

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான காடுகளும், தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர் வனச்சரகத்திற்குட்பட்ட பர்லியார், மரப்பாலம் போன்ற பகுதிகளில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் சமவெளி வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள், ஒரு குட்டியுடன் பர்லியார் வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் நேற்று முன்தினம் கே.என்.ஆர். நகர், மரப்பாலம் வழியாக நஞ்சப்பா சத்திரம் பகுதிக்கு சென்றன.

குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு நஞ்சப்பா சத்திரம் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் மீண்டும் நுழைந்தன. அதனை விரட்டும் பணியில் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை ஒன்று திடீரென்று வனத்துறையினரையும், வேட்டை தடுப்பு காவலர்களையும் ஓட, ஓட துரத்தியது. இதனால் பீதி அடைந்த அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

அப்போது வேட்டை தடுப்பு காவலரான லோகேஸ்வரன் (வயது 27) என்பவர் கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து சக ஊழியர்கள் அந்த யானையை அங்கிருந்து விரட்டி விட்டு லோகேஸ்வரனை மீட்டனர். பின்னர் அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story