முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் சேதங்கள் தவிர்ப்பு; கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் சேதங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பரமக்குடி நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இரட்டை பிள்ளையார் கோவில் தெரு புறவழிச்சாலையில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை பார்வையிட்ட அவர், சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதையும், அப்பகுதியில் மது பாட்டில்கள், கழிவுப்பொருட்கள், கிடப்பதையும் கண்டார். உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க உத்தரவிட்டார். மேலும் இந்த சுகாதார வளாக பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் ரோஜா மகளிர் மன்றத்துக்கான உரிமத்தை ரத்து செய்யவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வன்னிமரத்தெரு, புளிய மரத்தெரு, கருப்பணசுவாமி தெரு, சின்னக்கடை காய்கறி மார்க்கெட் தெரு, ராமலிங்க அடிகளார் தெரு, கமால் முஸ்தபா தெரு, சவுகத்தலி தெரு, மந்திரி மேனன் தெரு ஆகிய தெருக்களில் கலெக்டர் வீரராகவ ராவ் நடந்து சென்று கழிவுநீர் கால்வாய்களை ஆய்வு செய்தார். மேலும் கால்வாய்களில் கழிவுநீர் தேங்காதவாறு தினமும் முறையாக பராமரிக்கவும் நகராட்சி சுகாதார துறையினருக்கு உத்தரவிட்டார். பரமக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு மழை நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதை பார்த்த அவர் போர்க்கால அடிப்படையில் அப்பகுதியில் பேவர் பிளாக் பதிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணு சந்திரன், தாசில்தார் பரமசிவன், துணை தாசில்தார் வரதன், நகராட்சி இளநிலை பொறியாளர் லட்சுமி, சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் உடன் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– நகரில் வீடுகள் தோறும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து சுகாதாரத்தை பாதுகாக்க முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தெருக்களில் உள்ள வாருகால்களில் தேங்கும் மணலை அள்ளுவதுடன் அப்பகுதியில் இருந்து கழிவு மணலை அகற்ற வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், கொசுத்தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நகராட்சி சுகாதார துறையினர் செயலாற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது புயல் காலமாக உள்ளதால் மாவட்டத்தில் அனைத்து துறையினரும் தொடர்ந்து தயார் நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த வாரம் கஜா புயல் வீசியபோது மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. மேலும் கஜா புயலின் போது மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதால் படகுகளின் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.