‘கஜா’ புயலால் மேற்கூரை பறந்து சேதம்: நுகர்பொருள் வாணிப குடோனில் இருந்த அரிசி மூட்டைகள் மழைக்கு நாசம்


‘கஜா’ புயலால் மேற்கூரை பறந்து சேதம்: நுகர்பொருள் வாணிப குடோனில் இருந்த அரிசி மூட்டைகள் மழைக்கு நாசம்
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 7:42 PM GMT)

இலுப்பூர் அருகே கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு மேற்கூரை பறந்து சேதம் அடைந்தது. நுகர்பொருள் வாணிப குடோனில் இருந்த அரிசி மூட்டைகள் புயல், மழைக்கு நாசமாயின. பொங்கல் அறுவடைக்கு காத்திருந்த செங்கரும்புகள் சாய்ந்தன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தை வதம் செய்த ‘கஜா’ புயலால் லட்சக்கணக்கான மரங்களும், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் உள்ளிட்டவை கடும் சேதமடைந்தன. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தும், மரங்கள் வீடுகளில் விழுந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. மின்கம்பங்கள் சாய்ந்ததால் 5 நாட்களாக கிராமப்புற மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்திட போதிய பணியாளர்களும், அறுவை எந்திரங்களும் இல்லாததால் பொதுமக்களே களத்தில் இறங்கி அந்த பணியினை மேற்கொள்ளத் தொடங்கினர். கிராமப்புறங்களில் ‘டேங்கர்’ லாரிகள் மூலம் வினியோகித்து குடிநீர் தேவையை செய்து வருகின்றனர். கஜா புயலால் மக்கள் மீளா துயரத்தில் ஆழ்ந்து சோகம் தோய்ந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர், விராலிமலை செல்லும் சாலையில் இருபகுதிகளிலும் பழமையான வேரோடு சாய்ந்த மரங்களும், மின்கம்பங்களும் வரிசையாக கிடக்கின்றன. வெளியூர்களில் இருந்து வந்த பணியாளர்கள் மின்கம்பங்கள் சீரமைப்பிலும், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து பெருஞ்சுனை, மதியநல்லூர், சித்தன்னவாசல், மேட்டுச்சாவடி, அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி வழியாக விராலிமலை வரை சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஓரளவு நிலைமை சீராகி விட்டது. சாலை யோரம் உள்ள பயணிகள் நிழற்குடைகள் சரிந்து கிடக்கின்றன.

அதே வழித்தடத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள செங்கரும்பு தோட்டத்தில் உள்ள கரும்புகள் ‘கஜா’ புயலின் கோரத்தாண்டவத்துக்கு சாய்ந்தும், முறிந்தும் மடிந்துபோய் கிடக்கின்றன. வருகிற பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய தயாராக வைத்திருந்த செங்கரும்புகள் மடிந்துபோய் கிடப்பதை கண்டு விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்தனர். அரசு என்ன நிவாரணம் தந்தாலும் நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த செங்கரும்பு பயிர்கள் மடிந்ததற்கு ஈடாகாது என அவர்கள் தெரிவித்தனர்.

இலுப்பூருக்கும், மலைக்குடிப்பட்டிக்கும் இடையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட செயல்முறை கிடங்கு உள்ளது. இங்கு 3 பெரிய சேமிப்பு குடோன் உள்ளது. விராலிமலை, இலுப்பூர் தாலுகாவுக்குட்பட்ட 112 ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மூட்டைகள், கோதுமை, பருப்பு, சர்க்கரை ஆகியவை இங்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 குடோனில் மட்டுமே 200 டன் உணவு பொருட்கள் உள்ளன.

கடந்த 16-ந் தேதி அதிகாலை கோரத்தாண்டவம் ஆடிய ‘கஜா’ புயலுக்கு குடோனில் உள்ள மேற்கூரைகள் பறந்து சின்னா பின்னமாகி விட்டன. மேலும் புயலுடன் மழையும் பெய்ததால் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நனைந்து நாசமாயின. காலையில் ஊழியர்கள் வந்து நனைந்து சேதமான மூட்டைகளை அப்புறப்படுத்திவிட்டு, எஞ்சிய மூட்டைகளை, பாலித்தீன் கவரால் மூடினார்கள். தற்போது குடோனில் உடைந்த மேற்சுவர் மற்றும் புயலுக்கு சேதமான மேற் கூரைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

Next Story