வியாசர்பாடியில் ஊட்டி பெண் மர்மச்சாவு கள்ளக்காதலனிடம் விசாரணை


வியாசர்பாடியில் ஊட்டி பெண் மர்மச்சாவு கள்ளக்காதலனிடம் விசாரணை
x
தினத்தந்தி 20 Nov 2018 11:30 PM GMT (Updated: 20 Nov 2018 7:44 PM GMT)

வியாசர்பாடியில் ஊட்டி பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி வனிதா ஜூலி (வயது 42). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஊட்டியில் உள்ள துணிக்கடையில் வனிதா ஜூலி வேலை செய்து வந்தார். தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆதிராஜன் (36). இவர் ஊட்டியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

ஆதிராஜனுக்கும் வனிதா ஜூலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு ஆதிராஜனுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வனிதா ஜூலி தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அங்கு ஆதிராஜன் மீது அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்ததாக தெரிகிறது. இதனால், ஆதிராஜன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனிதா ஜூலியை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 7-வது தெருவில் ஆதிராஜனின் நண்பர் ரமேஷ் என்பவர் மூலம் வீடு வாடகைக்கு எடுத்து வனிதா ஜூலி அங்கு தங்கி இருந்தார்.

வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்த ஆதிராஜனின் நண்பன் ரமேசுடன் வனிதா ஜூலிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆதிராஜன், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். அப்போது, வனிதா ஜூலி தான் கர்ப்பமாக இருப்பதாக ஆதிராஜனிடம் தெரிவித்துள்ளார். இதனால் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ஆதிராஜன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வனிதா ஜூலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்திற்கு ஆதிராஜன் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மர்மமான முறையில் இறந்த வனிதா ஜூலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது போலீசாருக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த ஆதிராஜன் கீழே விழுந்ததில் அவரது கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டு தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து ஆதிராஜனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

போலீசார் வனிதா ஜூலியின் கணவர் உதயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பிரேதபரிசோதனை செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வனிதா ஜூலி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஆதிராஜன் கொலை செய்து நாடகம் ஆடுகிறாரா? என்பது போலீசார் விசாரணையில் தெரியவரும். மேலும் ரமேசிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story