8–ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரம்: போலீசார் எச்சரித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவன்
திருப்பூரில் 8–ம் வகுப்பு மாணவிக்கு பிளஸ்–1 படிக்கும் மாணவர் காதல் கடிதம் கொடுத்த விவகாரத்தில், மாணவனை போலீசார் எச்சரித்தனர். இதனால் மனம் உடைந்த மாணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
வீரபாண்டி,
திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்த 13–வயது மாணவி அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி வசிக்கும் பகுதியை சேர்ந்த 17–வயது மாணவன் ஒருவன் அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்–1 படித்து வருகிறான். அந்த மாணவனுக்கு, மாணவி மீது தீராத காதல். எப்படியும் மாணவியை சந்தித்து பேசி விட வேண்டும் ஒவ்வொருநாளும் துடியாய் துடித்து வந்தான்.
இதற்காக மாணவியை பின் தொடர்ந்து செல்வது, மாணவியிடம் பேச முயற்சி செய்வது என தினமும் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் எந்த புதிய முயற்சியும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து இனி ஒரு நொடியும் தாமதித்து பலனில்லை, தாமதிக்காமல் காதல் கடிதம் கொடுக்க வேண்டியதுதான் என காதல் கடிதத்தை எழுதி, ஒருநாள் மாணவி கையில் கொடுத்து விட்டான். ஆனால் என்னவோ கனியும் என்று காத்திருந்த மாணவனுக்கு, காதல் கனியவில்லை. மாறாக காதல் எதிர்வினையாற்ற தொடங்கியது.
இதற்கிடையில் அந்த மாணவி, மாணவன் கொடுத்த காதல் கடிதத்தை பெற்றோரிடம் கொண்டு சமர்ப்பித்து விட்டார். பின்னர் அந்த காதல் கடிதத்துடன், மாணவியின் பெற்றோர் மாணவன் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த மாணவனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து விட்டு, அங்கு எச்சரித்து விட்டு அனுப்பி வைத்தனர். இதனால் மன வேதனை அடைந்த மாணவன் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
உடனே வீட்டில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மாணவனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாணவிக்கு, மாணவன் காதல் கடிதம் கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.