திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் பாட்டியுடன் தற்கொலை
வெள்ளகோவில் அருகே திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் ஒருவர் பாட்டியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளகோவில்,
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் சத்யா (வயது 24). பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருடைய பெற்றோர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், தந்தை வழி பாட்டியான தங்கம்மாள் என்கிற தங்காயியுடன் (65) வசித்து வந்தார். சத்யாவுக்கும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கச்சேரிவலசை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி பூபதி (27) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவி இருவரும் வெள்ளகோவில் அருகே மு.பழனிசாமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அப்போது சத்யாவின் நகையை பூபதி அடமானம் வைத்து செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையை எடுத்துக்கொண்டு சத்யா, கருங்கல்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கருங்கல்பாளையம் சென்ற பூபதி, தனது மனைவி சத்யாவை சமாதானம் செய்து வெள்ளகோவில் மு.பழனிசாமி நகருக்கு அழைத்து வந்தார். அப்போது பேத்திக்கு துணையாக தங்கம்மாளும் உடன் வந்து தங்கினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கம்மாள், சத்யா மற்றும் அவருடைய 5 மாத குழந்தை மற்றும் பூபதி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது குழந்தை அழுததால் குழந்தையை எடுத்துக்கொண்டு பூபதி, தனது பெற்றோர் வீடான கச்சேரி வலசு சென்று விட்டார். பின்னர் இரவு 9 மணிக்கு பூபதி குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து சத்யா என்று பெயர் சொல்லி அழைத்தார்.
அப்போது வீட்டில் இருந்து சத்யாவின் குரல் வராததால் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு சத்யாவும், தங்கம்மாளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபதி, இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தன் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கம்மாளின் கணவர் கண்ணுசாமி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சத்யாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் மட்டுமே ஆவதால், தாராபுரம் சப்–கலெக்டர் கிரேஸ் பச்சாவு, காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.
வெள்ளகோவில் அருகே பாட்டியுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தாயை இழந்து 5 மாத குழந்தை தவிப்பது பார்ப்போர் அனைவரின் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது.