விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா


விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 8:12 PM GMT)

மங்கலம் அருகே விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மங்கலம்,

திருப்பூர் மங்கலத்தை அடுத்த நடுவேலம்பாளையம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நடுவேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் தெய்வாத்தாள் (வயது 60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் காய்கறிகள் மற்றும் பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுகாலை 10 மணி அளவில் தெய்வாத்தாளுக்கு சொந்தமான நிலத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தெய்வாத்தாள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மின்சார வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு “முன் அறிவிப்பின்றி எதற்காக எங்கள் விளைநிலத்தில் அளவிடுகிறீர்கள்’’ என கேள்வியெழுப்பினர். பின் அதிகாரிகள் “உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடுகள் நடைபெறுவதாக’’ தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் அளவீடு செய்த இடத்தில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம், வருவாய்துறை அதிகாரிகள் வரும் வரை இடத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். பின் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் தாசில்தார் அருணா, தர்ணா போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தாசில்தாரிடம் “உயர்மின் அழுத்த கம்பிகளை நெடுஞ்சாலையோரம் பூமிக்கு அடியில் புதைத்து எடுத்து செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

பின் இதற்கு தாசில்தார் அருணா “இது தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து முறையிடுங்கள், அதுவரை உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story