கோவையில் மாயமான அ.ம.மு.க. நிர்வாகியை கொலை செய்த நண்பர் கைது
கோவையில் மாயமான அ.ம.மு.க. நிர்வாகியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துடியலூர்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் ஜெயவேணு (வயது 36). இவர் கோழிக்கடை நடத்தி வந்தார். இவர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு பாலதீபா என்ற மனைவியும், கீர்த்திராஜ் (6) என்ற மகனும், கீர்த்தியாராய் (4) என்ற மகளும் உள்ளனர்.
ஜெயவேணு, கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி தனது மனைவி பாலதீபாவிடம் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல தனது நண்பரான துடியலூர் வடமதுரையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் கோவை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, நீதிமன்றத்தில் சாட்சி சொல்லி விட்டு நான் வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயவேணு வீட்டிற்கு செல்ல வில்லை. அவருடைய செல்போனையும் தொடர்பு கொள்ளமுடிய வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பாலதீபா, தனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறி துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடமும் புகார் மனு அளித்தார். அதை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க துடியலூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் ஜெயவேணுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் முதற்கட்டமாக ஜெயவேணுவின் நண்பர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்களின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையில், ராஜேஷ் தனது செல்போனில் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு ஜெயவேணு வழக்கு குறித்து விசாரித்து உள்ளார். இதன் மூலம் அவர் புனே நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் புனே விரைந்து சென்று ராஜேசை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நான், சுரேஷ், ஜெயவேணு ஆகிய 3 பேரும் நண்பர்கள். கடந்த மாதம் ஜெயவேணு வழக்கு தொடர்பாக கோவைக்கு வந்தார். பின்னர் நாங்கள் 3 பேரும் சேர்ந்து வரப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மது குடித்தோம். அப்போது வழக்கில் ஆஜராவது குறித்து, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த நானும், சுரேசும் சேர்ந்து ஜெயவேணுவை இரும்பு கம்பியால் தாங்கினோம். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் பிணத்தை அங்குள்ள கிணற்றில் வீசினோம். இதையடுத்து போலீசாருக்கு பயந்து வடமாநிலத்துக்கு சென்று, தலைமறைவானேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயவேணு கொலை செய்யப்பட்டதை அறிந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து ராஜேஷ் கொடுத்த தகவலின் பேரில் கோவை வடக்கு தாசில்தார் முன்னிலையில் கிணற்றில் கிடக்கும் ஜெயவேணுவின் பிணத்தை மீட்கும் பணி இன்று (புதன்கிழமை) நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story