40 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு; மதுரை ஐகோர்ட்டில் சுகாதாரத்துறை தகவல்


40 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு; மதுரை ஐகோர்ட்டில் சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 8:35 PM GMT)

தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 40 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மதுரை ஐகோர்ட்டில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் தற்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எனவே போர்க்கால அடிப்படையில் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல்களுக்கான மருந்து, மாத்திரைகளை போதுமான அளவு இருப்பு வைக்கவும், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் எத்தனை பேர் இறந்துள்ளனர், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘கடந்த 19–ந்தேதி வரை (அதாவது நேற்றுமுன்தினம் வரை) தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து 13 பேரும், பன்றிக்காய்ச்சலால் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,440 பேரும், பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,745 பேரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து அண்டை மாநிலங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த எதுமாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ள தமிழக நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, அங்குள்ளது போல் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் மேற்கொள்ளலாமே என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

பின்னர், காய்ச்சலை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை வருகிற 27–ந்தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story