7 ஆண்டுகளுக்கு பிறகு நிலையூர் கண்மாய் நிரம்பியது; விவசாய பணிகள் தீவிரம்


7 ஆண்டுகளுக்கு பிறகு நிலையூர் கண்மாய் நிரம்பியது; விவசாய பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:00 AM IST (Updated: 21 Nov 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது.

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்றாக நிலையூர் கண்மாய் உள்ளது. திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டில் உள்ள இந்த கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து நிலையூர் கால்வாய் வழியாக உபரி தண்ணீர் வருகிறது. மேலும் சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய்க்கு கூடுதலாக தண்ணீர் வருகிறது. இந்தநிலையில் தற்போது நிலையூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

இதே சமயம் கண்மாயின் உள்வாயிலில் நீர்பிடிப்பு பகுதிக்குள் தொழிற்சாலைகள், மாடி வீடுகள் கட்டி இருப்பவர்கள் தங்களது குடியிருப்புகள் மழை தண்ணீர் தேங்குகிறது. எனவே தண்ணீரை வெளியேற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கண்மாய் முழுமையாக நிரப்பாமல் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதில் சின்னமடை வழியே கலுங்கில் மறுகால் பாய்கிறது. அதன் தண்ணீர் நாற்றாங்கல் கொண்ட விவசாய நிலத்திற்கு செல்லுகிறது இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, நிலையூர் கண்மாய் முழுமையாக நிரம்பியதும் கண்மாய் கரையில் உள்ள பெரிய மடை, இரட்டை மடை வழியே மறுகால் பாயும் அதன் தண்ணீர் அதற்கான வாய்க்காலில் சென்று சூரக்குளம் உள்பட 10 கிராம கண்மாய்களுக்கு செல்லும். இதன்மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைவார்கள். ஆனால் தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பாத நிலையில் சின்னமடை வழியாக மறுகால் பாய்வதால் விவசாயம் பாதிக்கும். தண்ணீர் வீணாகும். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story