‘கஜா’ புயலால் வெள்ளப்பெருக்கு: கொடைக்கானலில் ஏரி உடைந்து 50 ஏக்கர் பயிர்கள் நாசம்
கொடைக்கானல் அருகேயுள்ள கீழ்மடை பள்ளம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியதில் 50 ஏக்கர் பயிர்கள் நாசமானது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கீழ்மடை பள்ளம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் 1,200 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ‘கஜா’ புயல் காரணமாக கடந்த 16-ந் தேதி பெய்த மழைக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கீழ்மடை பள்ளம் ஏரிக்கரை உடைந்தது.
அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் சீறிப்பாய்ந்து ஏரிக்கு அருகே உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. அங்கு சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கேரட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் ஆகிய பயிர்கள் நாசமாகின. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க கரையை அப்பகுதி பொதுமக்களும், பூண்டி ஊராட்சி ஊழியர்களும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியின் கரைகள் பலத்த மழைக்கு மீண்டும் உடைய வாய்ப்புள்ளது.
எனவே ஏரி கரைகள் உடையாமல் இருக்கும் வகையில் கான்கிரீட் சுவரால் கட்டவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story