கடல் சீற்றம் எதிரொலி: கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை எச்சரிக்கை
கடல் சீற்றமாக இருப்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் முதுநகர்,
கஜா புயல் காரணமாக கடந்த 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடல் சீற்றம் தணிந்த பிறகு கடந்த 17-ந்தேதி முதல் கடலூர் துறைமுகத்தில் இருந்து பைபர் மற்றும் விசைப்படகுகளில் மீனவர்கள் ஆர்வமுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது தவிர 4 முதல் 5 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்களும் ஆழ்கடலில் நேற்றும் மீன்பிடித்தனர். இந்நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், கடல் சீற்றமாக இருக்கும் என்றும், மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதையடுத்து கடலூர் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா உத்தரவின்பேரில் உதவி இயக்குனர் கங்காதரன் மேற்பார்வையில் மீன்வளத்துறை அலுவலர்கள், அனைத்து மீனவ கிராம தலைவர்கள், படகு உரிமையாளர்களுக்கு செல்போன், வாட்ஸ்-அப் , வாக்கி-டாக்கி மூலமாக கடல் சீற்றமாக இருப்பதால் நாளை(வியாழக்கிழமை) வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்று விட்டனர். அவர்கள் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதை அறிந்ததும் அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர். மாலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதற்கிடையே காலையில் 1.8 மீட்டர் உயரமாக இருந்த கடல் அலைகளின் சீற்றம், மாலையில் 3 மீட்டர் உயரத்துக்கு அதிகரித்தது. இருப்பினும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட படகுகளில் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மாலை கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த கடல் அலை கரையை நோக்கி பல அடி தூரத்துக்கு சீறிப்பாய்ந்தது. இதையடுத்து மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த தங்களது பைபர் படகு, கட்டுமரம் மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் இழுத்து மேடான இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
புயல், மழையால் தொடர்ந்து மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story