ராணுவ ஆயுதக்கிடங்கு அருகே வெடி விபத்து 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சாவு 10 பேர் படுகாயம்


ராணுவ ஆயுதக்கிடங்கு அருகே வெடி விபத்து 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சாவு 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Nov 2018 5:30 AM IST (Updated: 21 Nov 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

ராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயத்துடன் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வார்தா, 

ராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயத்துடன் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ராணுவ கிடங்கு

மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் உள்ள புல்காவ் நகரில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதக் கிடங்கு அருகே மிகப்பெரிய காலி மைதானம் ஒன்று இருக்கிறது.

இந்த மைதானம் காலாவதியான மற்றும் பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட வெடிபொருட்களை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணியளவில் சில வெடிமருந்துகளை பூமிக்குள் புதைத்து அழிக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் ராணுவ கிடங்கில் பணிபுரியும் வெடிகுண்டு நிபுணர்களும், ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பயங்கர வெடிவிபத்து

அங்கு வெடிபொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

அப்போது அங்கிருந்த 16 தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் உடல் சிதறி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயம் அடைந்து துடித்து கொண்டு இருந்தனர்.

6 பேர் சாவு

குண்டு வெடித்ததுபோல ஏற்பட்ட பயங்கர சத்தம் கேட்டு ராணுவ கிடங்கில் இருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். மைதானத்தில் தொழிலாளர்கள் உடல் சிதறிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் ஒருவர் ராணுவ கிடங்கு ஊழியர் என்றும், மற்றவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்றும் தெரியவந்தது.

படுகாயம் அடைந்த மற்ற 10 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தீவிர விசாரணை

வெடி விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

புல்காவ் ஆயுதக் கிடங்கில் கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story