நாலச்சோப்ராவில் பயங்கரம் மும்பை ஓட்டல் ஊழியர் தலை துண்டித்து கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


நாலச்சோப்ராவில் பயங்கரம் மும்பை ஓட்டல் ஊழியர் தலை துண்டித்து கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Nov 2018 4:30 AM IST (Updated: 21 Nov 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

மும்பையை சேர்ந்த ஓட்டல் ஊழியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். தலை மற்றும் உடலை வெவ்வேறு இடங்களில் வீசி சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வசாய், 

மும்பையை சேர்ந்த ஓட்டல் ஊழியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். தலை மற்றும் உடலை வெவ்வேறு இடங்களில் வீசி சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தலை, உடல் மீட்பு

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் உள்ள சாக்கடையில் நேற்றுமுன்தினம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ஆண் உடல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தலை இல்லாத அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், விராரில் உள்ள காட்டுப் பகுதியில் பிளாஸ்டிக் பைக்குள் வைத்து வீசப்பட்டு கிடந்த ஒரு வாலிபரின் தலையை போலீசார் கைப்பற்றினர்.

ஓட்டல் ஊழியர்

விசாரணையில், இது நாலச்சோப்ராவில் மீட்கப்பட்ட உடலின் தலை என்பது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் அவரை தலையை துண்டித்து கொடூரமாக கொன்று உடலை சாக்கடையிலும், தலையை காட்டுப்பகுதியிலும் வீசியிருந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், கொலை செய்யப்பட்ட வாலிபர் பெயர் விகாஷ் பவ்தானே (வயது19) என்பதும், மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக அவரை தலையை துண்டித்து கொன்றனர்? என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story