கட்டுமான நிறுவனத்தில் ரூ.4¾ லட்சம் கொள்ளை முகமூடி ஆசாமிகள் 3 பேருக்கு வலைவீச்சு
கட்டுமான நிறுவனத்தில் புகுந்து ரூ.4¾ லட்சத்தை கொள்ளை அடித்துச்சென்ற முகமூடி ஆசாமிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
கட்டுமான நிறுவனத்தில் புகுந்து ரூ.4¾ லட்சத்தை கொள்ளை அடித்துச்சென்ற முகமூடி ஆசாமிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பணப்பெட்டகம்
நவிமும்பை கன்சோலி பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பணப்பெட்டகம் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. சில பத்திரங்களும் அதன் அருகே சிதறி கிடந்தன. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரபாலே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெட்டகத்தை கைப்பற்றினர்.
பத்திரங்களையும் எடுத்து பார்த்தனர். அதில் அவை அனைத்தும் வீட்டுப்பத்திரங்கள் என்பது தெரியவந்தது. விசாரணையில், பணப்பெட்டகம் மற்றும் பத்திரங்கள் கன்சோலியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் இருந்தவை என்பது தெரியவந்தது.
இரும்பு ஷட்டர் உடைப்பு
இதுபற்றி உடனே போலீசார் அந்த கட்டுமான நிறுவன மேலாளர் சந்தீப் குமார் பால் என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதைக்கேட்டு பதறிப்போன அவர் கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அப்போது, அலுவலகத்தின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே இருந்த 70 கிலோ எடைகொண்ட பணப்பெட்டகம் காணாமல் போயிருந்தது. உடனே இதுபற்றி அந்த நிறுவனத்தை நடத்தி வரும் கட்டுமான அதிபர் மனோஷ் ஷாவுக்கு தெரிவித்தார்.
ரூ.4¾ லட்சம்
பின்னர் இருவரும் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். கொள்ளை போன பணப்பெட்டகத்தில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்ததாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்வையிட்டனர். இதில், சம்பவத்தன்று இரவு முகமூடி அணிந்த 3 ஆசாமிகள் அலுவலகத்துக்குள் புகுந்து பணப்பெட்டகத்தை தூக்கிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
கொள்ளையர்கள் பணப்பெட்டகத்தை மைதானத்துக்கு தூக்கி சென்று உடைத்து, அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்து கொண்டு ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொள்ளையர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story