வானவில் : ஸ்கோடாவின் புதிய கோடியாக் ‘எல்’ அண்ட் ‘கே’
சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸ்கோடா நிறுவனம் தற்போது முதல் முறையாக தனது நிறுவனர்களின் பெயர்களை உள்ளடக்கிய எஸ்.யு.வி. காரை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த கார் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.35.99 லட்சமாகும்.
இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் வக்லாவ் லூரின் மற்றும் வக்லாவ் கிளமென்ட் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் கோடியாக் எல் அண்ட் கே என்ற பெயரில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கிரில் மற்றும் டிப்யூஸர் ஆகியன மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல சில்வர் நிறத்திலான மேற்கூரை (ரூப் ரெயில்) கம்பிகள் இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
விமானத்தில் உள்ள விமானி அறை (காக்பிட்) போன்ற தோற்றத்தில் இதன் உள்புறம், குறிப்பாக டிரைவர் இருக்கை உள்ளது. இந்தியாவில் இத்தகைய வசதிகளோடு கூடிய முதலாவது கார் இதுவாகும். இதன் முன்பகுதியில் மிகப் பெரிய திரை உள்ளது. இதில் காரின் வேகம், காரின் கட்டுப்பாடு உள்ளிட்ட விவரங்கள், செல்லும் வழி உள்ளிட்டவை தோன்றும். அத்துடன் இதில் 360 டிகிரி சுற்றுப்புறத்தை பார்க்கும் நான்கு வைட் ஆங்கிள் கேமராவும் உள்ளது. இதன் உள்பகுதி பியானோ கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2 லிட்டர் டீசல் என்ஜின், 150 ஹெச்.பி. திறன், 340 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் இதில் உள்ளது. நான்கு சக்கரங்களும் செயல்படும் வசதியோடு 7 கியர்களுடன் இது வந்துள்ளது. டூயல் கிளட்ச் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இதன் சிறப்பம்சமாகும்.
முந்தைய கோடியாக் மாடலை விட இது ரூ.2 லட்சம் அதிகமாகும்.
Related Tags :
Next Story