அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் மாற்றி வைக்க முடியுமா? கர்நாடக வனத்துறை உதவியை நாடும் அதிகாரிகள்


அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் மாற்றி வைக்க முடியுமா? கர்நாடக வனத்துறை உதவியை நாடும் அதிகாரிகள்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 21 Nov 2018 10:56 PM IST)
t-max-icont-min-icon

அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் மாற்றிவைக்க முடியுமா? என்பது குறித்து கர்நாடக மாநில வனத்துறையிடம், வேலூர் மாவட்ட அதிகாரிகள் கருத்து கேட்டுள்ளனர்.

வேலூர், 

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் செயல்படாமல் இருந்த விமான நிலையத்தை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இங்கு விமான நிலைய அலுவலகம், பயணிகள் ஓய்வறை உள்பட பல்வேறு கட்டிட பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலும் விமான ஓடுதளமும் சீரமைக்கப்பட வேண்டி இருந்தது. முதல் கட்டமாக விமான ஓடுதளத்தை சீரமைத்து, அதன் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் விமானம் வந்து செல்வதற்கு வசதியாக அந்தப்பகுதியில் உள்ள மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 101 மரங்களை அகற்றுவதற்கு கணக்கெடுக்கப்பட்டது. அதில் 82 மரங்களை வெட்டாமல் அங்கிருந்து வேறு இடத்தில் மாற்றிவைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பொறுப்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் மாற்றி வைத்தால் அது பட்டுப்போகாமல் இருக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை இதுபோன்று அவர்கள் மரங்களை வேறு இடத்தில் மாற்றிவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மரங்களை மாற்றிவைப்பது குறித்து வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், கர்நாடக மாநில வனத்துறையினரிடம் கருத்துகேட்டுள்ளனர். அங்கிருந்து தகவல் வருவதற்கு இன்னும் 2 வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்வதற்காக சிக்னல் அமைப்பதற்கான உபகரணங்களும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சிக்னல் அமைப்பதற்கும் சில மரங்களை அகற்ற வேண்டி உள்ளது. இதற்காக அருகில் உள்ள ஷூ கம்பெனி மற்றும் தனியார் பட்டா நிலத்தில் உள்ள மரங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ஷூ கம்பெனியில் 40 மரங்களும், தனியார் பட்டா நிலத்தில் 17 மரங்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story