கம்பம் பகுதியில்: கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல்
கம்பம் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் புழக்கத்தில் விட்டுள்ளது.
கம்பம்,
தமிழக-கேரள எல்லையில் கம்பம் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்துக்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடை உற்பத்தி நடைபெறுகிறது. மாட்டு வியாபாரமும் களை கட்டி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கம்பத்துக்கு வருகின்றனர்.
இதேபோல் கேரள மாநிலம் குமுளி, கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியாறு மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கம்பத்துக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். கம்பம் வாரச்சந்தை, உழவர்சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால் கம்பம் நகர் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனை பயன்படுத்தி கள்ள ரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் புழக்கத்தில் விட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கம்பத்தில் வாரச்சந்தை நடந்தது. இதனால் மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனை பயன்படுத்தி கம்பம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் 500 ரூபாய் கள்ளநோட்டை மர்ம நபர் கொடுத்து பொருட்களை வாங்கி சென்று விட்டார். இரவில் பணத்தை சோதனை செய்யும்போது அது கள்ள ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது. இதனால் அந்த வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். கள்ள நோட்டு புழக்கத்தினால் கம்பம் பகுதியை சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து கம்பத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:-
கம்பம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கிறவர்களில் பெரும்பாலானோர், கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு வாரந்தோறும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அன்றைய தினம், தொழிலாளர்கள் தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கம்பத்தில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
அந்த சமயத்தில், சமூக விரோதிகள் சிலர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த ரூபாய் நோட்டுகள், சுழற்சி முறையில் வியாபாரிகள் அல்லது கூலி தொழிலாளர்களின் கையில் சிக்குகின்றன.
இதனை வங்கியில் செலுத்தும் போது தான், அவை கள்ளநோட்டு என்பது தெரியவருகிறது. மீண்டும் கள்ள நோட்டுகளை வங்கிக்கு கொண்டு வந்தால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்வோம் என்று அதிகாரிகள் கூறுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கம்பம் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுகிற கும்பலை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story