தர்மபுரியில் கந்து வட்டி பிரச்சினையால் பெண் தற்கொலை பணம் கேட்டு மிரட்டியவர் கைது
தர்மபுரியில் கந்து வட்டி பிரச்சினையால் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரியை சேர்ந்தவர் மைதிலி(வயது 31). சவுளுப்பட்டியில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் நடத்தி வந்தார். அந்த பகுதியில் இருந்த ஒரு கிடங்கில் பழைய பொருட்களை இருப்பு வைத்திருந்தார். கடந்த ஆண்டு அந்த குடோனில் தீப்பிடித்தது. இதில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதனால் நஷ்டமடைந்த மைதிலி தொழிலை தொடங்குவதற்காக தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரிடம் வட்டிக்கு ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
அதிக வட்டியால் சிரமத்திற்கு உள்ளான மைதிலி தனது தாயாரிடம் ரூ.20 ஆயிரம் வாங்கி கடனை அடைக்க சென்றார். ரூ.20 ஆயிரத்தை பழனியிடம் கொடுத்த போது வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து ரூ.70 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மைதிலி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் மைதிலியின் வீட்டிற்கு சென்ற பழனி வட்டி மற்றும் அசலை கேட்டு தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மைதிலி ஆசிரியர் காலனியில் உள்ள தனது தாயார் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து கந்து வட்டி வசூலித்து மிரட்டல் விடுத்ததாக பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story