ஆசை வார்த்தையை நம்பி பீகார் செல்ல முயற்சி: சென்டிரலில் 3 சிறுமிகள் மீட்பு, வடமாநில வாலிபர் கைது


ஆசை வார்த்தையை நம்பி பீகார் செல்ல முயற்சி: சென்டிரலில் 3 சிறுமிகள் மீட்பு, வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2018 11:30 PM GMT (Updated: 21 Nov 2018 6:44 PM GMT)

வடமாநில வாலிபரின் ஆசை வார்த்தையை நம்பி பீகாருக்கு செல்ல முயற்சித்த 3 சிறுமிகள் சென்டிரலில் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை அழைத்து செல்ல முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 3 சிறுமிகளுடன் ஒரு வடமாநில வாலிபர் சுற்றி திரிந்து கொண்டிருப்பதை அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்) போலீசார் பார்த்தனர். இதனால் சந்தேகமடைந்து அவர்களை அழைத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அப்போது 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் ரெயில்வே பாதுகாப்புப்படை நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சிவனேசன் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த கவுதம் ரவிதாஸ் (வயது 23) என்பதும், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள நூற்பாலையில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

தன்னுடன் வேலைபார்க்கும் 3 சிறுமிகளை பீகாரில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு அழைத்து செல்ல இருந்ததாகவும், அதில் ஒரு சிறுமியை தன்னுடைய காதலி என்றும் அந்த கவுதம் ரவிதாஸ் போலீசாரிடம் கூறினார்.

அதேவேளையில் சிறுமிகள் வேலைக்கு வராததால் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களது பெற்றோர் பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவல்களையும் இன்ஸ்பெக்டர் சிவனேசன் சேகரித்தார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், தான் காதலித்த சிறுமி மற்றும் அவரது தோழிகள் என 3 பேரையும் ஆசைவார்த்தை கூறி பீகாருக்கு அழைத்து செல்ல முயன்றதாகவும், பீகாரிலேயே அவர்கள் 3 பேருடன் இருந்திட திட்டமிட்டதாகவும் கவுதம் ரவிதாஸ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரவிதாஸ் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட 3 சிறுமிகளும் அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விரைவில் பெற்றோரிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Next Story