வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - முதல்–அமைச்சர் நாராயணசாமி பேட்டி
வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
நெல்லித்தோப்பு அண்ணாநகரில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பாலகிருஷ்ணன் தம்பதியர் நேற்று படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை முதல்–அமைச்சர் தொகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு அருகில் உள்ள தெருவில் நடந்துள்ளது.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கொலை சம்பவம் குறித்து கேட்டறிந்தார். கொலையாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். நகை, பணத்திற்கான கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது பின்புலம் உள்ளதாக என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபார நிறுவனங்களில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இனி வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்படும். குறிப்பாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்கள் உஷாராக இருக்க வேண்டும். போலீசாரின் நடவடிக்கையின் காரணமாக குற்றங்கள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் குற்றங்கள் தலை தூக்கியுள்ளது. அதற்கான மூலகாரணத்தை அறிந்து விரைவில் குற்றங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறியதாவது:–
கொலை செய்யப்பட்டு இருப்பவர்கள் வயதானவர்கள். விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடக்கிறது. எனவே வேறு ஏதோ ஆவணத்தை தேடி கொலைக்காரர்கள் வந்துள்ளனர். பாலகிருஷ்ணனை கழுத்தை நெறித்தும், ஹேமலதாவை தலையணையால் அமுக்கி மூச்சுத்திணறடித்தும் கொலை செய்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் முழு விவரம் தெரியவரும். தனிப்படை அமைத்து கொலையாளிகளை விரைவில் பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.