புரட்டி போட்ட கஜா புயல்: எஸ்.புதூரில் சகஜ நிலை திரும்பவில்லை


புரட்டி போட்ட கஜா புயல்: எஸ்.புதூரில் சகஜ நிலை திரும்பவில்லை
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 8:21 PM GMT)

கஜா புயலால் சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதூர் ஒன்றிய கிராமங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஒருவாரம் ஆகியும் சகஜ நிலை திரும்பாததால் மக்கள் கடும் தவிப்பிற்குள்ளாக வருகி

எஸ்.புதூர்,

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள், வீடுகள் சேதமடைந்தன. பயிர்கள் நாசமாயின. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தினசரி கடும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

புயல் பாதித்த பகுதிகளில் அரசு அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சில இடங்களில் மின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் சாய்ந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடும் பணியும், தரையில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை சரி செய்யும் பணியும் நடைபெறாமல் உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பாக எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தான் கஜா புயல் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் ஒருவாரமாக எந்த வசதியும் இன்றி சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை இல்லாமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்.புதூர் ஒன்றிய கிராமங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பிரான்பட்டி, புழுதிபட்டி, செட்டிக்குறிச்சி, கரிசல்பட்டி, வலசைபட்டி, குளத்துபட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து மீட்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் இதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ள ஜே.சி.பி. எந்திரம் மற்றும் மரம் அறுவை எந்திரம் மூலமாக நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி, தரையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பி வழங்கப்பட்டு வருகிறது.

முசுண்டபட்டி கிராமத்தில் புயலால் சாய்ந்த பப்பாளி தோட்டத்தை பார்வையிட்ட கலெக்டர், அதன்பிறகு மேட்டாம்பட்டி கிராமத்தில் புயலால் சேதமடைந்த வீடுகள், புடலங்காய் மற்றும் பாகற்காய் தோட்டங்களை பார்வையிட்டு அந்தந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மேட்டாம்பட்டி கிராம மக்கள் மோசமான நிலையில் உள்ள தங்களது மயான சாலை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் வலசைபட்டி கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் ஜெயகாந்தன் கூறும்போது, கஜா புயலால் வீடுகள் இழந்தவர்களுக்கு அரசின் சார்பில் புதிதாக இலவச வீடு கட்டி தரப்படும். விவசாய நிலங்கள் பாதிப்பிற்கேற்றவாறு நிவாரண தொகை வழங்கப்படும் என்றார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சிங்கம்புணரி தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story