கார்-மொபட் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி கடையம் அருகே பரிதாபம்


கார்-மொபட் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி கடையம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 22 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே நேற்று காரும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பாவூர்சத்திரம், 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசை கிராமத்தை சேர்ந்தவர் தவசி என்பவருடைய மகன் சுரேஷ் (வயது 32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சக்தி (29). இவர்களுடைய மகன் அன்புச்செல்வன் (7), மகள் மதுபாலா (5). இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கூட விடுமுறையான நேற்று சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மொபட்டில் கடையம் அருகே அருணாசலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

மாலை 6 மணியளவில் கடையத்தை அடுத்துள்ள எல்லைப்புள்ளி ஊர் அருகே வந்த போது, தென்காசியில் இருந்து கடையம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சுரேஷ் ஓட்டிச் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சுரேஷ், சக்தி, அன்புச்செல்வன், மதுபாலா ஆகிய 4 பேரும் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியிலும், அவர்களது உறவினர்கள் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story