கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்,
‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் கடந்த 16-ந்தேதி பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக வத்தலக்குண்டு மற்றும் பழனி செல்லும் மலைப்பாதைகள், மேல்மலை பகுதிக்கு செல்லும் பாதைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து சாலைகள் சீரமைப்பு செய்யப்பட்டு இலகுரக வாகனங்கள் இயக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், லாரிகள் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் செந்தில் தலைமையில் 100-க் கும் மேற்பட்ட பணியாளர்கள் சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் பழனி மலைப்பாதையில் மண்சரிவு அகற்றப்பட்டது. மேலும் வத்தலக்குண்டு மலைப்பாதையில் குருசடி பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு மலைப்பாதை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
பின்னர், நேற்று காலை 7 மணி முதல் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு, பழனி, மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளுக்கு பஸ்கள் உள்பட கனரக வாகனங்கள் அனைத்தும் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story