அடுக்குமாடி கட்டிட மொட்டை மாடியில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு போலீஸ் தீவிர விசாரணை
அடுக்குமாடி கட்டிட மொட்டை மாடியில் பிளாஸ்டிக் பைக்குள் இருந்த பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசாய்,
அடுக்குமாடி கட்டிட மொட்டை மாடியில் பிளாஸ்டிக் பைக்குள் இருந்த பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை உடல்
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கில் சாக்சி அப்பார்ட்மெண்ட் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது.
கட்டிட குடியிருப்புவாசிகள் மேலே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு ஒரு பிளாஸ்டிக் பைக்குள் பச்சிளம் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி துலிஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
அந்த குழந்தை பிறந்து 2 அல்லது மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கட்டிடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதன் காரணமாக அந்த குழந்தையின் உடலை அங்கு போட்டவர்கள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாய் யார் என்பதை கண்டறிய அங்குள்ள மருத்துவமனைகளில் 2 அல்லது மூன்று நாட்களுக்கு முன் யாராவது பிரசவித்தார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story