மாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 50.8 மில்லி மீட்டர் பதிவானது


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 50.8 மில்லி மீட்டர் பதிவானது
x
தினத்தந்தி 22 Nov 2018 10:30 PM GMT (Updated: 22 Nov 2018 4:56 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 50.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு 10 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு முழுவதும் விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலை 11.30 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையில் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கியது.

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடைபெற்று வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் திருவண்ணாமலைக்கு வந்து உள்ளனர். இவர்கள் நேற்று பகலில் மழையில் நனைந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் 12 மணி அளவில் மழை நின்றது. இருப்பினும் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் நகரின் மையப்பகுதியில் தீபம் ஏற்றப்படும் மலை, மழை மேகத்தால் சூழ்ந்து காணப்பட்டது.

இதேபோல ஆரணி, வாணாபுரம், வந்தவாசி, சேத்துப்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அதிகபட்சமாக 50.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

மாவட்டத்தின் மற்ற பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வந்தவாசி - 49.2, சேத்துப்பட்டு - 42.5, செய்யாறு - 24, ஆரணி - 23.7, வெம்பாக்கம் - 23.4, திருவண்ணாமலை - 16.2, சாத்தனூர் அணை - 12.8, கலசபாக்கம் - 12, தண்டராம்பட்டு - 9.8, போளூர் - 8.6.

Next Story