கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராள மனதுடன் நிவாரண நிதி வழங்குங்கள் - நீலகிரி மக்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராள மனதுடன் நிவாரண நிதி வழங்குங்கள் என்று நீலகிரி மக்களுக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஊட்டி,
கஜா புயல் தாக்கியதில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த புயலால் பலர் உயிரிழந்து உள்ளனர். வீடுகளின் மேற்கூரைகள் பறந்ததோடு, குடிசை வீடுகள் இடிந்து கீழே விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை இழந்து வசிக்க இடம் இல்லாமல் தவிக்கிறார்கள். விவசாயிகள் தங்களது நிலங்களில் வளர்த்து வந்த தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. காவிரி டெல்டா மாவட்ட மக்கள் கஜா புயலால் உண்ண உணவின்றியும், குடிக்க தண்ணீர் இன்றியும் திண்டாடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சுனாமி, புயல் மற்றும் கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் மனிதாபிமானத்துடன் உணவு பொருட்கள், கம்பளி, ரெடிமேடு ஆடைகள், குடிநீர், மருந்து, மாத்திரைகள், நாப்கின்கள் போன்றவற்றை வழங்கியதுடன் நிவாரண தொகையையும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை கருத்தில் கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்பட 10 மாவட்ட மக்களுக்கு உதவிகளை புரிய ‘உதவும் உதகை’ என்ற பெயரில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் வகையில் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த 16-ந் தேதியன்று கரையை கடந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் நீலகிரி மாவட்ட மக்கள் தாராள மனதுடன் நிவாரண தொகையை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம். மேலும் உணவு, நிவாரண பொருட்களை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் வழங்கலாம். டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையையும், கண்ணீரையும் துடைக்க நம்மால் இயன்ற உதவிகளை செய்ய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story