நெக்குந்தியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 141 பயனாளிகளுக்கு ரூ.1.9 கோடியில் நல உதவிகள் கலெக்டர் மலர்விழி வழங்கினார்


நெக்குந்தியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 141 பயனாளிகளுக்கு ரூ.1.9 கோடியில்  நல உதவிகள் கலெக்டர் மலர்விழி வழங்கினார்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

நெக்குந்தி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 141 பயனாளிகளுக்கு ரூ.1.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நெக்குந்தி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குனர் ராஜமனோகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அஜய்சீனிவாசன், கலால் உதவி ஆணையர் முத்தையன், ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, பசுமை வீடுகள், சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் உள்பட 141 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மாதந்தோறும் ஒரு கிராமத்தில் நடத்தப்படும் இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் வளர்ச்சி அடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 251 கிராம ஊராட்சிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்ட தலா ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. பெண்கள் கல்வி அறிவு பெற்றால் மட்டுமே ஒவ்வொரு குடும்பமும் கல்வி அறிவு பெறும். பெண்களுக்கு திருமண வயதை அடையும் முன்னர் திருமணம் செய்யக் கூடாது. இளம்வயது திருமணங்களை முழுமையாக தடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் அண்ணாமலை, வேளாண்மை துணை இயக்குனர் தேன்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, கால்நடைத்துறை உதவி இயக்குனர் வேடியப்பன், தாசில்தார் பழனியம்மாள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story