தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி காயம்
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி காயம் அடைந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதி வனப்பகுதிகளில் யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் கம்பு, சோளம் போன்ற பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் மீண்டும் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
தேன்கனிக்கோட்டை அருகே தேவனந்தநத்தம் வனப்பகுதியில் சுமார் 40 யானைகள் சுற்றி திரிகின்றன. 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இவ்வாறு வந்த யானைகள் நார்ப்பனட்டி வனப்பகுதிக்கு வந்தன.
அப்போது அந்த பகுதியில் மாதப்பன் (வயது 45) என்ற விவசாயி நிலத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு யானை மாதப்பனை தாக்கியது. இதில் காயம் அடைந்த மாதப்பனை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story