கஜா புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி தற்கொலை மேலும் ஒருவர் வேதனையில் சாவு


கஜா புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி தற்கொலை மேலும் ஒருவர் வேதனையில் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே கஜா புயல் தாக்கியதில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒருவர் வேதனையில் இறந்தார்.

ஒரத்தநாடு,

கஜா புயலின் கோர தாண்டவம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து விட்டது. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன.

இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். பல இடங்களில் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை லாரிகளில் ஏற்றி பலகை அறுக்க விவசாயிகள் அனுப்பி வருகிறார்கள். இந்தநிலையில் கஜா புயலில் சுமார் 5 ஏக்கர் தென்னை மரங்களை இழந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தஞ்சை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 57). விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்திருந்தார்.

இந்த தென்னை மரங்களில் பெரும்பாலானவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கிய கஜா புயலில் முறிந்து விழுந்தன. இதனால் சுந்தர்ராஜன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோகத்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற சுந்தர்ராஜன் இரவு வரையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுந்தர்ராஜன் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் பிணமாக கிடந்தார். அவர் அருகே ஒரு விஷ பாட்டில் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சுந்தர்ராஜன் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தென்னை மரங்கள் சாய்ந்ததால் சுந்தர்ராஜன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த சுந்தர்ராஜனுக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், சுதா என்ற மகளும், பிரபாகரன் என்ற மகனும் உள்ளனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி(வயது 52). விவசாயியான இவருக்கு சொந்தமாக 1 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கஜா புயல் தாக்கியதில் இவரது வீடு மற்றும் தென்னந்தோப்பு ஆகியவை சேதம் அடைந்தது. வீடு சேதம் அடைந்ததால் இவர் தனது தம்பி வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று காலை இவர் தனது தென்னந்தோப்புக்கு சென்று புயலால் சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டார். தான் ஆசை, ஆசையாக வளர்த்த தென்னை மரங்கள் புயலுக்கு சாய்ந்து கிடப்பதை பார்த்து வேதனை அடைந்த அவர், கீழே கிடந்த தென்னை மரங்களின் அருகில் சென்று அவைகளை தடவிக்கொடுத்தார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு குணமதி என்ற மனைவியும், ஆனந்தன், கார்த்தி என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர்.

Next Story