குன்னூரில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய ரேலியா அணை


குன்னூரில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய ரேலியா அணை
x
தினத்தந்தி 23 Nov 2018 3:45 AM IST (Updated: 23 Nov 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் பெய்து வரும் தொடர் மழையால், ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

குன்னூர்,

குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளுக்கு நீராதாரமாக ரேலியா அணை விளங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அப்போதைய குன்னூர் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. 43.7 அடி கொள்ளளவில் கடந்த 1941-ம் ஆண்டு ரேலியா அணை கட்டி திறக்கப்பட்டது. இந்த அணையில் இருந்தே குன்னூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை கிடைத்து வந்தது.

இதன் காரணமாக ரேலியா அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் குன்னூர் பகுதியில் நல்ல பெய்து வருகிறது. இதனால் ரேலியா அணை முழு கொள்ளளவான 43.7 அடியை எட்டி உள்ளது. அணை நிரம்பி வழியும் தருவாயில் இருக்கிறது. இதுகுறித்து குன்னூர் நகராட்சி மக்கள் கூறியதாவது:-

ரேலியா அணை நிரம்பும் தருவாயில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் நகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அணையில் 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் முறையாக குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. எனவே குடிநீரை தட்டுப்பாடின்றி வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story