ஒப்பந்தம் முடிந்து 18 மாதம் ஆவதால் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை விசைத்தறியாளர்கள் நடத்த வேண்டும் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
ஒப்பந்தம் முடிந்து 18 மாதம் ஆவதால் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிபாளையம்,
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எம்.அசோகன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 10.5.2015-ல் போடப்பட்ட 21½ சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தம் 10.5.2017-ல் முடிந்தது. இதையடுத்து 23.6.2017-ல் சங்க மகாசபை நடத்தி 75 சதவீதம் கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் சங்கத்திற்கு மனு கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பேசி தீர்வு காணாத நிலையில் தொழிற்சங்கம் சார்பில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளருக்கு மனு கொடுக்கப்பட்டது.
இதன்பேரில் 16.11.2017-ல் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தாசில்தார் முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விசைத்தறி உரிமையாளர்கள் தொழில் நிலைமை சரியில்லை. இதனால் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். 15.2.2018-ந் தேதிக்குள் உள்ளூரிலேயே பேசி சுமூக தீர்வு காணுகிறோம் என வாக்குறுதி அளித்தனர். இதன்பின்பும் குறித்த தேதியில் பேசி தீர்வு காணாத நிலையில், சங்கத்தின் சார்பில் 30.7.2018 முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 30.7.2018-ந் தேதி உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தையில் உரிமையாளர் சங்கம் மீண்டும் பல்வேறு காரணங்களை கூறி 29.11.2018 வரை கால அவகாசம் கேட்டது. தொழிற்சங்கமும் அன்றைய சூழலை கவனத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.
ஆனால் ஒப்பந்தம் முடிந்து 18 மாதம் ஆகியுள்ள நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட கால அவகாசம் தேதி நெருங்கி வருவதால் உடனடியாக பேச்சுவார்த்தையை விசைத்தறியாளர்கள் நடத்த ஏற்பாடு செய்து கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story