ரெயில் பயணத்தின் போது புகார் தெரிவிக்க செல்போன் செயலி பயணிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்


ரெயில் பயணத்தின் போது புகார் தெரிவிக்க செல்போன் செயலி பயணிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Nov 2018 5:00 AM IST (Updated: 23 Nov 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணத்தின் போது புகார் தெரிவிக்க செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

ரெயில்வே போலீஸ்துறையில் சென்னை, திருச்சியில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி.அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமை தாங்கினார். ரெயில்வே மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், டி.ஐ.ஜி. செந்தில்குமாரி, எஸ்.பி.ரோகிக்நாதன் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரெயில் பயணிகளின் உயிர், உடமைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து 5 விழிப்புணர்வு குறுந்தகடுகளை ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்டார்.

ரெயில் பயணிகளிடம் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த சென்டிரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாஸ் உள்பட 41 போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசியதாவது:- ரெயில் பயணிகள் எந்த ரெயில் நிலைய போலீசில் புகார் அளித்தாலும், அந்த புகாரை பெற்றுக்கொண்டு எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்று ரெயில்வே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் எடுத்த கொள்கை முடிவால், தற்போது ரெயில்வேயில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன.

ரெயில் பயணிகளுக்கு பயணத்தின் போது ஏதேனும் பிரச்சினை நேரிட்டால், புகாரை பதிவு செய்வதற்கு வசதியாக GRP HE-LP APP என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் இந்த செயலி செயல்படும். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் போது, வழியில் ஐதாராபாத்தில் ஏதேனும் நிகழ்ந்தால், அதனை செயலியில் பதிவு செய்யலாம். உடனடியாக அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் குறிப்பிட்ட பயணியை அணுகி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள். எனவே ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருக்கும் பயணிகள் இந்த செல்போன் செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே பெண் போலீசாருக்கு உடல் ஆரோக்கியம் குறித்து சவீதா மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேகா, தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் திலகவதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர். சென்டிரல் ரெயில்வே டி.எஸ்.பி. ரவி நன்றி கூறினார்.

Next Story