ஏற்காட்டில் பலத்த மழை; சுற்றுலா பயணிகள் அவதி எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விடுமுறை


ஏற்காட்டில் பலத்த மழை; சுற்றுலா பயணிகள் அவதி எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் நேற்று பலத்த மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். மேலும் மழையினால் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ஏற்காடு, 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. ஏற்காடு-சேலம் மலைப்பாதையில் கடும் மேக மூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதனிடையே நேற்று பகலில் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்காட்டுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கி கிடந்தனர். இதன் காரணமாக சாலைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக நேற்று ஏற்காட்டில் உள்ள காபி எஸ்டேட்டுகளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மழையை பொருட்படுத்தாமல், நனைந்தபடியே சென்றதை காணமுடிந்தது. மேலும் மழையினால் சாலையோர கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டிருந்தன.

மழை பெய்து கொண்டே இருந்ததால் ஏற்காடு படகு இல்லத்தில் நேற்று படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதே போன்று நேற்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. மழையினால் இரவில் கடுங்குளிர் நிலவியது. இதே போல சேலம் மாநகரில் நள்ளிரவு முதல் காலை வரை விடிய, விடிய சாரல் மழை பெய்தது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ.) வருமாறு:-

வீரகனூர்-68, கெங்கவல்லி-42.4, ஆத்தூர்-30.4, தம்மம்பட்டி-25.4, வாழப்பாடி-21.3, கரியகோவில்-15, ஏற்காடு-12.8, பெத்தநாயக்கன்பாளையம்-12.2, ஓமலூர்-9.6, மேட்டூர்-8.6, காடையாம்பட்டி-6, சேலம்-5.5, சங்ககிரி-5.2, அணைமடுவு-4, எடப்பாடி-3.

மாவட்டத்தில் பதிவான சராசரி மழை அளவு 17.9 மி.மீ.

Next Story