சேலம் கோர்ட்டு வளாகத்தில் கைதி தற்கொலை மிரட்டல் 2 மனைவிகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு
சேலம் கோர்ட்டு வளாகத்தில் கைதி தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவருடைய மனைவிகள் 2 பேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்கிற கபாலி(வயது 30). இவருடைய மனைவி சியாமளா(26). கபாலி ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சியாமளா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கணவரை பார்ப்பதற்காக சிறை அதிகாரிகளிடம் மனு எழுதி கொடுத்தார். அதே நாளில் கபாலியை பார்ப்பதற்காக மல்லூரை சேர்ந்த தவமணி(19) என்ற பெண்ணும் மனு எழுதி கொடுத்துள்ளார். மனுவில் அந்த பெண், கபாலியை தனது கணவர் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து சிறை அதிகாரிகள் கபாலியின் மனைவிகள் என்று கூறிய 2 பேரையும் வாருங்கள் என்று அழைத்திருந்தனர். இதை கேட்டதும் சியாமளா அதிர்ச்சி அடைந்தார். சிறை அதிகாரிகளிடம் நான் தான் கபாலியின் மனைவி என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் கபாலி, சியாமளாவுக்கு தெரியாமல் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவமணிக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் மல்லூர் போலீசார் தவமணியை அழைத்து விசாரித்தனர். சியாமளா தூண்டுதலின் பேரில் தான், அந்த பெண் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாக தவமணி எண்ணினார். இதுதொடர்பாக கணவரிடம் புகார் தெரிவித்தார்.
இந்தநிலையில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீசார் சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டு வளாகத்தில் வந்து கொண்டிருந்த போது நீதிதேவதை சிலை அருகே கபாலி திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அவருடைய கையில் பிளேடு ஒன்றும் இருந்தது. பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம் அவர், தன்னை இங்கிருந்து அழைத்து செல்ல முயன்றால் நான் பிளேடால் கழுத்தில் கீறி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீஸ் அதிகாரிகளிடம் கபாலி, தன்னுடைய 2-வது மனைவி தவமணிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உன்னுடைய மனைவியை மனு எழுதி கொடுக்க சொல் என்றும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த கபாலியை போலீசார் அங்கிருந்து கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். இதனிடையை கபாலியை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்த கபாலியின் மனைவிகள் சியாமளா, தவமணி ஆகியோர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் மாறி, மாறி தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக தாக்கி மோதிக் கொண்டனர்.
மனைவிகள் சண்டை போடுவதை பார்த்து எதுவும் பேச முடியாமல் கபாலி திகைத்து நின்றார். இதையடுத்து போலீசார் சியாமளா, தவமணி ஆகியோரின் மோதலை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story