மேச்சேரி அருகே தாசில்தாருக்கு கொலை மிரட்டல்; 2 பெண்கள் கைது


மேச்சேரி அருகே தாசில்தாருக்கு கொலை மிரட்டல்; 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 23 Nov 2018 3:45 AM IST (Updated: 23 Nov 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே தாசில்தாரை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மேச்சேரி, 

சத்தீஷ்கார் மாநிலம் ராய்கர் என்ற இடத்தில் இருந்து தமிழகத்தில் வேலூர், தர்மபுரி, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், பொட்டனேரி, குட்டப்பட்டி மற்றும் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம் வழியாக சிறுகனார் என்ற இடம்வரை மின்சாரம் கொண்டு செல்ல, உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் மேச்சேரி அருகே மல்லிகுந்தம் வன்னியனூர் பகுதியை சேர்ந்த அம்சவேணி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கப்படுகிறது. அந்த இடத்தை பார்வையிடுவதற்க்காக தாசில்தார் அறிவுடைநம்பி, மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் ஜெயமணி, கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

அப்போது எங்கள் நிலத்தை எதற்கு பார்வையிடுகிறீர்கள் என கேட்டு அம்சவேணி மற்றும் அவரது உறவினர்கள் மயிலி, மணிபாலன், பெரியசாமி உள்பட 4 பேர் தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கல்லால் தாக்கி கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப் படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்சவேணி (வயது 32), மயிலி (55) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story