‘கஜா’ புயலால் 200 வீடுகள் இடிந்து சேதம்: இயல்பு நிலைக்கு திரும்பாத கோவிலூர், ஆடலூர் பகுதி கிராமங்கள்


‘கஜா’ புயலால் 200 வீடுகள் இடிந்து சேதம்: இயல்பு நிலைக்கு திரும்பாத கோவிலூர், ஆடலூர் பகுதி கிராமங்கள்
x
தினத்தந்தி 23 Nov 2018 3:45 AM IST (Updated: 23 Nov 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலில் சிக்கி கோவிலூர், ஆடலூர் பகுதிகளில் 200 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டத்தை மையமாக கொண்டு தாக்கிய ‘கஜா’ புயலால் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் ஊராட்சி பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இந்த காற்றில் சிக்கி கோவிலூர், எம்.ஜி.ஆர்.நகர், நல்லூர், சாலையூர், தோப்புப்பட்டி, நவக்குளம், ரெத்தினகிரியூர், ஜெ.ஜெ.காலனி, உப்பலபட்டி, சாமிநாதபுரம், களத்தூர், சக்திநகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன.

மரங்கள் விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அன்றாடம் கூலிவேலைக்கு செல்பவர்களுக்கு சொந்தமான குடிசை, ஓட்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதை சீரமைக்க போதுமான பணம் இல்லாததால் வீடுகள் சிதைந்து கிடப்பதை கண்ணீரோடு பார்த்து வருகிறார்கள். வீட்டை இழந்தவர்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தற்காலிகமாக சீரமைத்து மின்வினியோகம் செய்யப்பட்டாலும், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

லேசாக சேதமடைந்த வீடுகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க தாமதமாகும் என்பதால் கடன் வாங்கி வீடுகளை புதுப்பித்து வருகிறார்கள். இந்த மின்தடையால் மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டியில் குறைந்த அளவே குடிநீர் ஏற்றப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, தனியார் டிராக்டரில் இலவசமாக வழங்கும் குடிநீரையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் தாசில்தார் சுரேஷ்கண்ணன் ஆகியோர் புயலால் சேதமடைந்த வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் மற்றும் வீடுகளை பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவி பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர். இதையொட்டி, சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது பெரியமரம் விழுந்துள்ளது. அதை இதுவரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். புயல் தாக்கி 7 நாட்கள் ஆகியும் இன்னும் கோவிலூர் பகுதி மக்கள் அதிலிருந்து முழுவதும் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவிலூரை சேர்ந்த சண்முகம் கூறும்போது, புயல் பாதித்த பகுதிகளை ஆளும் கட்சியினர், அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் பெற்று தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை நினைத்து பார்க்கவில்லை. வீடு சேதமடைந்தவர்கள் தங்குவதற்கு கோவிலூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், முகாமில் அரசு சார்பில் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் யாராவது இலவசமாக உணவு கொடுப்பார்களா? என்று எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தனியார் வழங்கும் உணவை பெற்றுக்கொண்டு முகாமை விட்டு சென்றுவிடுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்’ என்றார். மொத்தத்தில் கோவிலூர் கிராமம் புயல் பாதிப்பில் இருந்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இதேபோன்று, புயலில் சிக்கி ஆடலூர், பன்றிமலை, மலையாண்டிபுரம், அழகுமடை, பேத்திரைக்காடு ஆகிய மலைக்கிராமங்களில் 8 வீடுகள் இடிந்துவிட்டன. வீட்டை இழந்தவர்கள் அங்குள்ள பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கடந்த 7 நாட்களாக மின்சாரம் இல்லாததால் இருளில் தவித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் காட்டெருமைகள் பொதுமக்களை வழிமறிப்பதுடன், அட்டை பூச்சிகளும் கடிக்கின்றன. மின்சாரம் இன்றி செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியதால் தொலைதொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைக்கிராமங்களில் இயல்பு நிலை திரும்ப அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story