ஈரோட்டில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


ஈரோட்டில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2018 11:00 PM GMT (Updated: 22 Nov 2018 8:03 PM GMT)

ஈரோட்டில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோயின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் கால்நடைகள் இறந்துவிடுகின்றன. மேலும், கோமாரி நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஈரோடு கருங்கல்பாளையம், அந்தியூர், சீனாபுரம், மொடச்சூர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய இடங்களில் நடந்து வரும் கால்நடை சந்தைகளுக்கு 2 வாரங்கள் தடை விதித்து மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.

இந்தநிலையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு கால்நடை ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். துணை இயக்குனர் டாக்டர் கோபால்சாமி கலந்துகொண்டு கோமாரி நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறையும். எருமை மாடுகளின் வேலை செய்யும் திறனும் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது. மேலும் கன்றுக்குட்டிகள் இறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் இந்த நோயின் தாக்கம் காணப்படுகிறது. கால்நடைகளின் வாயில் புண்கள் ஏற்படுவதால் தீவனத்தை உட்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவ வேண்டும். போரோ கிளிசரின் கலவையையும் புண்களுக்கு தடவலாம்.


கால்நடைகளுக்கு கோமாரி நோய் அறிகுறி தென்பட்டதும் உடனடியாக சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நோய் பாதித்த மாடுகளை வெளியே மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. மாடுகள் விற்பதையும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான கால்நடைகளையும், நோய் பாதித்த கால்நடைகளையும் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்கக்கூடாது. குறிப்பாக நோய் பாதித்த கறவை மாடுகளின் பாலை கன்றுக்குட்டிகளுக்கு கொடுக்கவே கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி இயக்குனர்கள் பழனிசாமி, தங்கவேல், மாரியப்பன், ஈரோடு மாவட்ட கறவை மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் வியாபாரி சங்க தலைவர் கந்தசாமி, செயலாளர் முருகன் மற்றும் கால்நடை வியாபாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story