வானில் இருந்து வந்த நெருப்பு பந்து திம்பம் மலைப்பகுதியில் விழுந்ததால் பரபரப்பு
வானில் இருந்து வந்த நெருப்பு பந்து திம்பம் மலைப்பகுதியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அய்யப்பன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மழை பெய்கிறதா? என்பதை பார்ப்பதற்காக தன் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து உள்ளார். அப்போது வானில் இருந்து ஏதோ ஒரு பொருள் தீப்பிடித்தபடி பந்துபோல் வேகமாக பூமியை நோக்கி வந்ததை அதிசயத்துடன் பார்த்தார்.
உடனே அவர் தான் வைத்திருந்த செல்போனில் படம் பிடித்தார். இந்த நிலையில் நெருப்பு பந்து சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பகுதியில் விழுந்தது. உடனே அவர் எதுவும் தீப்பிடித்து எரிகிறதா? என திம்பம் மலைப்பாதையை உற்று பார்த்தபடி இருந்தார். ஆனால் தீப்பிடிக்கவில்லை.
இதேபோல் இந்த காட்சியை சத்தியமங்கலத்தை சேர்ந்த பலரும் பார்த்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘நெருப்பு பந்து திம்பம் மலைப்பகுதியில் விழுந்ததை சத்தியமங்கலத்தை சேர்ந்த பலர் பார்த்து உள்ளனர்.
அது அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்திருக்கலாம். எனினும் எந்தவித தீ விபத்தும் மலைப்பகுதியில் ஏற்படவில்லை,’ என்றனர்.
வானில் இருந்து விழுந்த நெருப்பு பந்துபோன்ற பொருள் விண்கல்லாக இருக்குமோ? என சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story