காரைக்குடி அருகே: கால்வாய் சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - கிராம மக்கள் போராட்டம்
காரைக்குடி அருகே கால்வாயை சீரமைக்க முயன்ற கிராம மக்களை அதிகாரிகள் தடுத்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லல்,
காரைக்குடி அருகே ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட மேலமகாணத்தில் உள்ளது சூரக்குடி கண்மாய். இந்த கண்மாய்க்குட்பட்டு சுமார் 200 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இந்த கண்மாயில் உள்ள நீர்வரத்து கால்வாய் கடந்த 2009-ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் சீரமைக்கப்பட்டது.
மேலும் கண்மாயில் உள்ள வரத்துக்கால்வாயை ஆண்டுதோறும் கிராம மக்கள் சீரமைத்து வந்தனர். இதனால் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கருகுடி கிராமத்தினர் கண்மாயின் வரத்துகால்வாய் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கோரி கால்வாயை அடைக்க முயன்றனர்.
இந்தநிலையில் மேலமகாணம் கிராம மக்கள் வரத்துகால்வாயை சீரமைக்க உபகரணங்களுடன் சென்றனர். இதையறிந்ததும், இரு கிராமத்தினரிடையே பிரச்சினை ஏற்படக்கூடாது என்று திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் கால்வாயின் உண்மை நிலை குறித்து அறியவும், விரைவில் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சீரமைப்பு பணியை செய்யக்கூடாது என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் சமரச பேச்சு நடைபெற்றதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story