போலீஸ் நிலையம் முன்பு பெண் கிராம நிர்வாக அலுவலர் தீக்குளிக்க முயற்சி
போலீஸ்நிலையம் முன்பு பெண் கிராம நிர்வாக அலுவலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள மணலூர் குரூப் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவர் பணிக்கு தாமதமாக வருவதாகவும், பணி முடியும் முன்பே வீட்டுக்கு செல்வதாகவும் அந்த பகுதி கிராம மக்கள் பலமுறை தாசில்தார் அலுவலகத்தில் புகார் செய்தனராம்.
ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பொதுமக்களை அவர் தரக்குறைவாக பேசியதை கண்டித்தும் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சிங்கம்புணரி மண்டல துணை தாசில்தார் கமலக்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, தான் பணிக்கு வரும் போது வண்டியை மறித்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றதாக கட்டுகுடிபட்டியை சேர்ந்த செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், இளங்கோ ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத நிலையில் ராஜலட்சுமி தனது வாகனத்தில் கொண்டு வந்த மண்எண்ணெய்யை எடுத்து, போலீஸ்நிலையம் முன்பு நின்றுகொண்டு உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் விரைந்து வந்து ராஜலட்சுமியை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி, சிகிச்சைக்காக எஸ்.புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி கூறும் போது, கட்டுகுடிபட்டியை சேர்ந்த சிலர் வண்டியை மறித்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க வந்தனர். மேலும் பணி செய்ய இடையூறு செய்து வந்தனர். இதுகுறித்து உயர்அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்று கூறினார்.
Related Tags :
Next Story